முகம்

பூமியின் புறப்பரப்பில்

யாருமே இன்றி

நான் மட்டுமே இருப்பதாய்

உணர்ந்திருக்கிறேன்


எடை முழுதும் இழந்து

அறிவியலின் ஆய்வுக்கு

உட்படவேண்டியவனாய்

உணர்ந்திருக்கிறேன்


நீங்கள் எல்லோரும் 

சிரிக்கும்போதெல்லாம்

அதிசய விலங்குகளாகத்தான்

உங்களை 

உணர்ந்திருக்கிறேன்


காமத்தோடு என்னிடம் 

பெண்ணொருத்தி

நெருங்கிய போதும்கூட

களவாட வந்திருப்பாளோ என்றே

உணர்ந்திருக்கிறேன்


கோவிலில் நீங்களெல்லாம்

பக்தியோடு கண்மூடி

வேண்டும் கணத்தில்

நீங்கள் மரணமடைந்து விட்டதாகவே

உணர்ந்திருக்கிறேன்


மழை பெய்யும் போதெல்லாம்

வெள்ளம் வந்து வீட்டை

சூழ்வதாகவே

உணர்ந்திருக்கிறேன்


 சகிப்புத்தன்மையோடு எல்லோரும்

சகித்துக்கொள்ளும் போது

சாயங்கள் பூசாத முகம் ஏதும்

என்னை இதுவரை

சந்திக்காததாகவே

உணர்கிறேன்..



No comments:

Post a Comment