கழுத்தும் கடவுளும்

சுமை தாளாமல்

கடவுளிடம் புலம்புகிறது

கழுத்து


முடி மூளை மூக்கு இதில்லாமல்

முன்னூற்றுச்சொச்சம் எலும்புகள்


கண்கள் அதை 

முறையின்றி பயன்படுத்தியதால்

மூக்கின் மேல் சுமையாய் சிலருக்கு

கண்ணாடி,


சில பெண்களுக்கு 

மூக்குத்தி மோகம் வேறு வந்து விடுகிறது


காதுகள் இரண்டு அதில் 

தொட்டில் போல ஏதேனும் தொங்க விட்டு

யுவன்களும் யுவதிகளும் செய்யும் 

தொல்லை

இவைகளின் சுமை போதாதென்று

இப்போது புதிதாய் தொங்குகிறது

மாஸ்க் ஒன்று,


தாடி வைத்து திரியும் ஆண்களையும்

நீளமான சடை இருந்தால்தான் அழகென்று நம்பும் பெண்களையும்

என்னதான் செய்வது,


தலைக்கு குளிக்காததால்

பேன்களின் சுமையோடு சிலர்


இவர்களில் எனக்கு பிடித்தவர்கள்

கிழவர்களும் கிழவிகளும்தான்

பற்கள் இல்லாததால்

பாரம் சற்றே குறைவு,


இவைகளைவிட

இந்த தமிழர்களின்

தொல்லைதான் தாங்கவில்லை..

இருக்கும் பாரம் போதாதென்று

இவர்களுக்கெல்லாம்

தமிழன் என்ற

தலைக்கணம் வேறு..


என் சுமையை குறைக்க

ஏதும் வழி இல்லையா

கடவுளிடம் கழுத்து

புலம்பியது..


மனிதர்களுக்குகூட பரவாயில்லை

என் தலைக்கு மேல் 

ஒருத்தி அமர்ந்திருக்கிறாளே

அந்த சுமையை என்ன செய்வது,

சிவபெருமானும் சினுங்கினான்..





படுக்கை

அநேகமாய்

இந்த வாரத்திற்குள் முடிந்துவிடும்

ஜோசியர் போல

நாள் குறித்துச்சென்றார்

மருத்துவர்


அடுத்த வாரம் விடுமுறை 

தேவைப்படலாம்

அலுவலகத்தில்

முன்னெச்சரிக்கையாய்

சொல்லி வைத்தான்

மகன்


அத்தை மகள் நிச்சயம் வருவாள்

ஆசையாய் மீசை நறுக்கினான்

பேரன்


சீர் என்ன செய்வீர்கள்

பிறந்த வீட்டாரிடம்

பேசிக்கொண்டிருந்தாள் 

மருமகள்


பள்ளிக்கூடத்திற்கு ஒரு வாரமேனும்

விடுமுறை போடலாம்

கொள்ளுப்பேரன்கள் திட்டம்

தீட்டினர்


அடுத்த மாதம் யார் வீட்டில்

சாப்பிடுவது

கவலையாய் யோசித்தாள்

மனைவி


அம்மாவின் நகைகள்

யாருக்கு சேரும்

யாரிடமோ விசாரிக்கிறாள்

மகள்


நலம் விசாரிப்பது போல்

வந்து விட்டு

தன் இருப்பை காட்டி விட்டு

சென்றான்

மேளக்காரன்


இதை எதுவும் அறியாமல்

கட்டிலில்

படுத்திருந்தது

அந்த பிணம்..





முகம்

பூமியின் புறப்பரப்பில்

யாருமே இன்றி

நான் மட்டுமே இருப்பதாய்

உணர்ந்திருக்கிறேன்


எடை முழுதும் இழந்து

அறிவியலின் ஆய்வுக்கு

உட்படவேண்டியவனாய்

உணர்ந்திருக்கிறேன்


நீங்கள் எல்லோரும் 

சிரிக்கும்போதெல்லாம்

அதிசய விலங்குகளாகத்தான்

உங்களை 

உணர்ந்திருக்கிறேன்


காமத்தோடு என்னிடம் 

பெண்ணொருத்தி

நெருங்கிய போதும்கூட

களவாட வந்திருப்பாளோ என்றே

உணர்ந்திருக்கிறேன்


கோவிலில் நீங்களெல்லாம்

பக்தியோடு கண்மூடி

வேண்டும் கணத்தில்

நீங்கள் மரணமடைந்து விட்டதாகவே

உணர்ந்திருக்கிறேன்


மழை பெய்யும் போதெல்லாம்

வெள்ளம் வந்து வீட்டை

சூழ்வதாகவே

உணர்ந்திருக்கிறேன்


 சகிப்புத்தன்மையோடு எல்லோரும்

சகித்துக்கொள்ளும் போது

சாயங்கள் பூசாத முகம் ஏதும்

என்னை இதுவரை

சந்திக்காததாகவே

உணர்கிறேன்..



சருகுகளின் கீரல்களை

சகித்துக்கொண்டே


நான் மட்டுமே நடக்கிறேன்

வன்ம மிருகங்கள் இருக்கும் அந்த

வனத்தில்..


புலி ஒன்று வந்தது

புரட்டி எடுக்குமோ என்று பயந்தேன்

புல் மேயத்தான் வந்தேன் என்றது


பாம்பு ஒன்றை பார்த்தேன்

பயந்து போய் பாய்ந்தோட முயன்றேன்

பல் இல்லை கடிக்க என்று பொக்கை வாயில் சிரித்தது


கத்திக்கொண்டே வந்த 

கரடியை பார்த்தேன்

கடவாய் பல்லில் கறி சிக்கிவிட்டது

எடுத்து விடு என்றது..


'பானை வயிறை குறைக்க

பத்தியம் ஏதேனும் சொல்லேன்'

யானை ஒன்று கேட்டது


சீறி வந்த சிக்கம்

சிரித்து விட்டு பிழைத்து போ

என்றது



கனவு கலைந்து

கண் விழித்தேன்,

கரங்களால் என்னை வளைக்கிறாய் நீ..


கானக மிருகங்களிடம் தப்பிவிட்டேன்

கட்டில் மிருகத்திடம்

சிக்கிக்கொள்கிறேன்..


சிங்கத்திடம் சிக்கியிருந்தால் கூட

சீக்கிரமாய் மீண்டிருப்பேன் என்றேன்

சிரித்தபடி நெருங்குகிறாய்-

அர்தத்தோடும் ஆவேசத்தோடும்..






இரட்டையர்

 'இந்த கவிதையை

ஏற்கனவே நீங்கள்

உள்ளீடு செய்து விட்டீர்களே'


'மறுத்து பேசுவதற்கு மன்னிக்கவும்,

மறுபதிப்பு அல்ல இது..

இரட்டையாய் எனக்குபிறந்த

இன்னொரு குழந்தை இது..

உருவம் ஒன்றுதான் 

ஆனால் 

அக்குழந்தை அல்ல இது..'


கவிதையும் 

கருவில் உருவாகும் குழந்தைதான்..

கற்ப பையில் உருவாவது 

இல்லை,

கற்பனை பையில் உருவாகிறது..

இருப்பதைப்போலவே இன்னொன்று பிறப்பதுவும் 

இயற்கையின் விளையாட்டு..

கற்பில் பிழை நிகழ்ந்தாலும் பரவாயில்லை 

கற்பனையில் பிழை நிகழக்கூடாதெனும் கவனத்துடன்தான் பிள்ளைகள் பெற்றெடுக்கிறோம்..

என்ன செய்வது 

கவனமாய் கருத்தரித்தாலும் பிள்ளைகளில் சிலர் பிழையோடு பிறந்து விடுகிறரர்கள்

அல்லது

பிள்ளைகளுடன் சில

பிழைகளும் பிறந்து

பிறந்துவிடுகிறது,

நெல்வயலில் 

புல் முளைப்பது போல..


திருத்தங்கள் 

வறவேற்கிறேன்

வருத்தங்கள் 

திரைமறைக்கிறேன்

அந்த இரவு...

திருமணத்திற்கு பிறகான

முதல் இரவைப்பற்றி 

முகம் நிறைய வெட்கத்தோடு

அவளும் அவனும் அலைபேசியில்....


'என்னால் உன்

உறக்கம் கெடும் பரவாயில்லையா..'


'தெரியும்..'


'உன் காதுகள்

என்னால் கூச்சம் அடையும் பரவாயில்லையா'


'பராவாயில்லை'


'உன் கால்கள் என் மேல்

விழவேண்டிய தேவை வரும்

பரவாயில்லையா'


'எனக்கு வெட்கம் வருதுங்க'


'என் வாய் உன்னை

ஓயவிடாது

பரவாயில்லையா'


'ச்சீய்..'


திருமணம் முடிந்த

முதல் நாள் இரவு...


உணர்ச்சிகள் அடங்கிய பின்

உறங்கிப் போனான் அவன்..


சொல்லில் இருந்தது

செயலில் இல்லை,

ஆசுவாசத்துடன் அவளும்

அடங்கிப்போனாள்..


நடுநிசி நேரம்..

காதுகளில் ஏதோ

கடப்பாரை உருளும் சப்தத்தால்

கண்முழித்தவள் 

கண்ட காட்சியில் கலங்கிப்போனாள்..


வாழைப்பழம் தின்பவன் போல

வாயை திறந்துகொண்டு

கும்பலாய் எருமை கத்துவதுபோல்

குரட்டை சப்தம் எழுப்பினான் அவன்..


இப்போது தான்

ஆரம்பவரிகளின் அர்த்தம் புரிந்தது

அவளுக்கு..


உறக்கம் தொலைந்தது,

கூர்வாளாய் கூச்சம்

காதுக்குள் நுழைந்தது..


இப்போது..

அவள் கால்களை

அவன் மேல் வைத்தாள்,

உணர்ச்சிக்காக அல்ல

உதைப்பதற்காக..




காய்ந்த மரம்..

முதலாளியின் உத்தரவை

கேட்டு கோடாரியும்

துணைக்கு முனியனையும்

கூட்டிக்கொண்டு

அந்த மலையின்

வடக்குப்புறம் இருந்த

சற்றே வரண்டு போன

அந்த அரசமரத்தை

வெட்ட கிளம்பினான்

கந்தன்


மரத்தை சுற்றி வந்தவனுக்கு

ஏதோ தோன்ற

வெட்டுதலை விட்டுவிட்டு

ஓரமாய் அமர்ந்தான்


ஏனென்று கேட்ட முனியனிடம்

பதில் ஏதும் கூறாமல்

அவன் பார்வை

அந்த மரத்தின்

அடிமரத்தில் கீழிருந்து

மூன்றடி உயரத்தில்

கீறலாய் இருந்த அந்த

பெயர்கள் மீது இருந்தது


கந்தன்-ராதா..


அப்பாவின் தற்கொலை

முயற்சியை காரணமாய்

காட்டி

நகர பேருந்தில்

நடத்துனராய் இருந்த

ரமேசை திருமணம் செய்து போனாள்

ராதா..


ஏதோ ஒரு காதல்

நாளில்

ஊருக்கு ஒதுக்குப் புறமாய்

இருந்த

இந்த மரத்தில்

அவர்கள் பெயரை

கல்லால் வெட்டி

எழுதியது ஞாபகம் வந்தது

கந்தனுக்கு


இப்போது

காய்ந்து கிடப்பது

இந்த அரச மரம் மட்டுமல்ல-

சாலை விபத்தொன்றில் கணவனை

இழந்து 

இரு பெண் குழந்தைகளோடு

அம்மா வீட்டில் இருக்கும்

ராதாவும்தான்..


#SRINI